- கிரிஜா மணாளன்
ஆசிரியர்/"மகிழ்ச்சி"





Laughter helps us forget about problems, our fear and allows us to lose ourselves momentarily! Laughter is the best medicine for Health!
சாதாரண 'ஒத்தைத்தலைவலி'ன்னு ஒரு கிராமவாசி அந்த டாக்டர்க்கிட்ட போனார். டாக்டராகப்பட்டவர், அவரை உக்காரவச்சி, நிக்கவச்சி, படுக்கவச்சி படாதபாடெல்லாம் படுத்திவச்சு ஏதோ பெரிய மருத்துவ உண்மையை கண்டுபிடிச்சிட்ட மாதிரி, "வேற வழியே இல்லே! லாப்ல போயி எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகணும்!" என்றார்.
கிலி பிடிச்சிப்போன அந்த கிராமத்து ஆள், தன் நிலையையும், தலையையும் நொந்துகொண்டவராய் புறப்பட்டுப்போனார். அடுத்த நாள். எல்லா டெஸ்ட்டுக்களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்த அவர், அவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவற்றைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி இவரை முறைத்தார்.
'என்னாச்சு டாக்டர், இதோட ரிஸல்ட் எப்படி இருக்கும்?..எனக்கு பயமா இருக்கு!" என்றார் கிராமவாசி. "ரிஸல்ட் படுமோசமாத்தான்யா இருக்கப்போவுது!........இந்த டெஸ்ட்டுக்களையெல்லாம் நான் எழுதிக்கொடுத்த க்ளினிக்குகள்ல எடுக்காம, நீர் எங்கேயோ போய் எடுத்துட்டு வந்திருக்கீறே? .....என் மச்சான் நாலு பேரோட க்ளினிக்குக்குப் போகாம நீர் வேற எங்கேயோ போனது அவனுகளுக்கு தெரிஞ்சா, அதோட ரிஸல்ட்டே வேற! அவனுங்க இதை என் வீட்டுக்காரிக்கிட்ட சொல்ல, அவ பத்ரகாளி மாதிரி ஆடி என்னை குதறி எடுத்துடுவா! என்று சொல்லி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டார்!
- கிரிஜா மணளன்
"கிரிஜானந்தா"வின் கிறுக்கு சிந்தனைகள்!============================================
1. துறவறம் பூண்ட சாமியார்களுக்கு 'சித்தி'யை அடைவதே குறிக்கோளாக இருக்கவேண்டும். தரிசனத்துக்காக பக்தர்களோடு வரும் அவர்களுடைய 'சித்தி'களை அல்ல!
2. ஆசைகளை ஒழித்தவர்களே 'சாமியார்' ராக ஆகவேண்டும். ஆசைகளை ஒளித்துவைத்துள்ளவர்கள் 'மாமியார்' வீட்டுக்கு (ஜெயில்)தான் போகவேண்டும்!
3. 'மடங்களுக்கும்' பெண்களுக்கும் இப்போதெல்லாம் அதிகத் தொடர்பு! ஏன்?.....பெண்களுக்கான 'நால்வகைப் பண்புகளில்' (அச்சம், நாணம், மடமை, பயிர்ப்பு) அவர்கள் 'மடம்' அதிகம் உள்ளவர்களாக இருப்பதால்தான்!
(சிந்தனைகள் தொடரும்)
====================== டாக்டர் ஜோக் ================
டாக்டரிடம் போனார் ஒரு வாடிக்கை நோயாளி.
"டாக்டர்! நீங்க சொன்னபபடி தினமும் அதிகாலை வாக்கிங் போறேன்."
"ரொம்ப சந்தோஷம்!"
"வாக்கிங் போறபோது மனசு ப்ரீயா இருக்கும்னு சொன்னீங்க...எனக்கு அதுதான் இல்லே!"
"ஏன் அப்படி?"
"நான் கடன் வாங்கியிருக்கற அந்த ஈட்டிக்காரன் ரகுராம் சேட்டையும் அந்த ரோட்டுலேயே வாக்கிங் போகச் சொல்லியிருக்கீங்க......வட்டி பாக்கியைக் கேட்டு அவன் என்னை விரட்டிக்கிட்டு வர்றான்.. எனக்கு எப்படி மனசு ப்ரீயா இருக்கும்? முதல்ல அவனை வேற ஏரியாவுக்கு வெரட்டி விடுங்க டாக்டர்!"
- "உம்மணாமூஞ்சி"
.........................அட்ஷய திரிதியை பற்றி ஒரு ஜோக்!.......................
(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்)
"உன் புருஷனை அரிச்சிக்கிட்டே இருந்தியே..அட்ஷய திரிதியைக்கு என்னதான் வாங்கினேடி?"
"ஹும், அந்த மனுஷரோட பிராணனைத்தான் வாங்க முடிஞ்சுது!"
....................................................................................................................................
அனுப்பியவர்: மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.
ஆறிப்போனா நல்லா இருக்காதுங்க!
(ஒரு டெலிபோன் உரையாடல்)
"அலோ!..... கூடுவாஞ்சேரிலேயிருந்து குப்புசாமி பேசறேன்......என் பையனுக்கு உங்க பொண்ணைப் பாக்க இன்னிக்கு வர்றாதா சொல்லியிருந்தோமுல்ல, எத்தனை மணிக்கு நாங்க வரலாம்?"
"பொண்ணு ஆபீஸ்லேயிருந்து 6 மணிக்கு வருவாள்ங்க. நீங்க 7 மணிக்கு வாங்களேன்!"
"சரி........டிபன் ரெடி பண்ணிட்டீங்களா?"
"அதெல்லாம் அப்பவே ரெடி ஆயிட்டுதுங்க!"
"ரொம்ப சந்தோஷம்!....அப்ப ஒண்ணு பண்றோம்......இப்ப உங்க வீட்டுக்கு வந்து டிபனை முடிச்சிக்கிட்டு வேற ஒரு இடத்துக்கு போயி ஒரு பொண்ணைப் பாத்துட்டு வந்துடுறோம்....உங்க பொண்ணு மெதுவா வரட்டும்........நம்ம பொண்ணை எப்பவும் பாத்துக்கலாம், ......டிபன் ஆறிப்போயிட்டுதுன்னா அவ்வளவு நல்லா இருக்காதுங்களே!"
"டொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
- கிரிஜா மணாளன்.
உங்களை எதுக்கு சிரிக்கச் சொல்றோம்னா...........
உடம்புல இருக்கற உறுப்புக்களை ஆரோக்கியமா வச்சிக்கிறதுக்காக நாம் தினமும் உடற்பயிற்சி செய்யறோம். ஜிம்முக்குப் போறதும், அப்படி வசதியில்லாதவங்க வீட்டுலேயே கையக் காலை ஆட்டியும், தண்டால், பஸ்கி எடுத்து மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க நிக்கறதும், வாக்கிங் போறேன்கற பேர்ல தெருத் தெருவா நடக்கறதும் உடற்பயிற்சிதான். இதுகளோட, தினமும் கொஞ்சநேரம் வாய்விட்டு சிரிக்கறதையும் ஒரு உடற்பயிற்சியாய் பண்ணிப்பாருங்க. நகைச்சுவையைக் கேட்டு ரசிச்சி சிரிக்கறது ஒரு அருமையான உடற் பயிற்சிங்கறதை மறந்துடாதீங்க! நம்ம உடம்புல ஏற்படுற காயங்கள், ரணங்கள் இதுகளை ஆறச்செய்றதுக்குன்னு 'நியூரோபேப்டைட்ஸ்' என்கிற திரவம் சுரந்துக்கிட்டே இருக்கும். இந்த திரவத்தை அதிகமா சுரக்கச்செய்ற ஆற்றல் 'சிரிப்பு'க்கு இருக்கறதா மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. மனசுல இறுக்கம், கவலை, படபடப்பு, நடுக்கம் இதுகள் ஏற்படறது நம்ம உடம்புல சேருற low density lippo ப்ரோட்டீன்கள்'களால் தான். நாம் வாய்விட்டுச் சிரிக்கும்போது, இந்த L.D.L. ப்ரோட்டீன்கள்' இயல்பு நிலையை அடைவதால், மனசு ரிலாக்ஸ் ஆகி, படபடப்பு, நடுக்கம் இதுகள் இருந்த இடம் தெரியாம ஓடிவிடும்! இதயமும் ரத்த ஓட்டத்தால் சீரடைந்து, அதனல் உள்ளுறுப்புக்கள் எல்லாமே சீரா வேலை செய்ய ஆரம்பிச்சுடும்! வாய்விட்டுச் சிரிக்கிறது, உள்ளுறுப்புக் களைச் சீராக வச்சுக்க நம் செய்ற 'ஜாகிங்' மாதிரின்னும் சொல்றாங்க மருத்துவ விஞ்ஞானிகள். அதனாலதான், சிரிங்க, சிரிங்க, நல்லா வாய்விட்டுச் சிரிங்க, அந்த சான்ஸ் இலவசமா கிடைக்கறதுக்கு அடிக்கடி ஹ்யூமர் க்ளப் நிகழ்ச்சிகளுக்குப் வாங்கன்னு எல்லாரையும் அழைக்கிறோம். புரியுதுங்களா? இதைப் படிச்சுட்டு, ஏதோ லேசா ஒரு ஸ்மைல் பண்ணிட்டு பேசாம இருந்துடாதீங்க! சிரிப்பு'ங்கறது உங்களுக்கு இலவசமா கிடைக்கற ட்ரீட்மெண்ட். அதைத் தேடிப்போறதுல அசட்டையா இருந்தா, உங்க உடம்புல இருக்கற உறுப்புகளும் தம் கடமையை அசட்டை பண்ணி.................அப்புறம் என்ன ஆகும்னு உங்களுக்கே புரியுதுதானே?
"வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகும்"கறது வெறும் அடுக்குமொழி வாக்கியம் மட்டுமில்லே, அதை மறந்துடாதீங்க!
கிரிஜா மணாளன் ... தஞ்சை தாமு
Humour Club Of Thanjavur
Tamilnadu, South India.
சுறுசுறுப்பான மாணவர்கள்!
ஒரு கல்லூரிப் பேராசிரியரைக் கடத்திக்கொண்டுபோன கும்பலிடமிருந்து அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு போன் வந்தது. "டேய் பசங்களா! உங்க புரொபசரை உயிரோட கொண்டுவந்து விடணும்னா, 5000 ரூபாயை நாங்க சொல்ற இடத்துக்கு நீங்க கொண்டுவந்து தரணும்!இல்லேன்னா .....அவரை பெட்ரோல் ஊத்தி எரிச்சிடுவோம்! புரியுதா? என்ன பசங்களா, கொண்டு வர்றீங்களா?" என்று சொல்லி வரவேண்டிய இடத்தையும் சொன்னார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் அவசரம் அவசரமாக தத்தம் வண்டிகளில் விரைந்தார்கள் .......கையில் ஆளுக்கொரு பெட்ரோல் டின்னுடன்!
(ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர், தமிழ்நாடு)
அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம்.
முற்றிலும் நகைச்சுவைக்கே முதலிடம் அளித்து இணைய வாசகர்களை மகிழ்விக்க ஓர் வலைப்பதிவைத் துவங்கவேண்டும் என்ற எனது நீண்ட கால ஆவலுக்கு வித்திட்ட திருமதி கோமதி நடராஜன் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றி. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் அனைத்து இதழ் களிலும் நகைச்சுவை வழங்கி நான் பெற்ற அனுபவங்கள் இந்த வலைப்பதிவு முயற்சிக்கும் உதவி, வாசகர்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஒத்துழைப்பை வேண்டி, இந்த வலைப்பதிவில் நுழைகிறேன். வணக்கம்.
> கிரிஜா மணாளன்.